கவிதை – காதல்

தொட்டுக்கொண்டு சிலகாலம்
தொடாமல் தூர நின்று சிலகாலம்
காதலித்த நினைவுகள் கண்ணுக்குள் கண்ணீராய் கனக்கின்றது.

உன் எல்லை ஊர்முழுக்க விரிந்த போதும்
நான் தலை நிமிர்ந்து வான் முட்ட உயர்ந்த போதும்
நான் நீ என்ற அகந்தை ஒருபோதும் நம்மிடையே விழித்ததில்லை.

நினைவுகூர்கிறேன் நம் காதலை

ஆடிப்பெருக்கில்
அழகிய மாலையில்,

பவளத்திற்கு பட்டு கட்டி
சாட்டை முடிக்கு சடை பின்னி
சங்குக் கழுத்தில் ஆரங்கள் அணிய
பொன்னடி கொண்ட மங்கையர்
மெல்லடி வைத்து நதிக்கரையோரம் நடக்கையிலே

ஆறடி உயரம்
அரைசதம் புருவம்
வீரிய மீசை
விரட்டிய பார்வை கொண்ட காளையர்
அவர் பின்னே அலைந்திடவே.

நீ மட்டும்
கீரிய தேகமாய் கூரிய நகமாய்
கல்லடி பட்டு காய்ந்த
என் காலடி வடுக்களை தேடி
உன் கையது விரிந்தது நினைவிருக்கிறது.

கோடை பருவத்தில்
கொட்டித்தீர்த்த வெயிலில்

சோலை வனம்
சோர்ந்து விழுந்திட
காலை கதிர்
கனலை கக்கிட
கானல் நீர் மட்டுமே
கண்ணுக்கு எட்டியது.

வெயிலுக்கு வெதும்பிய பூக்களில்
தேன் கிடைக்காத தேனீக்கள்
கோரைப் புல்லின்
கொழுத்த தேகத்தில்
தாகம் தீர்க்க வரிசை கட்டியது
கவனிப்பாரற்று கிடந்தேன்.

மெலிந்த தேகத்துடன்
மெல்லிய புன்னகையுடன்
காய்ந்து களைத்திருந்தேன்
கவலை உனக்கெதற்க்கு
குடை விரிக்கிறேன் இளைப்பாரு
என உன் மடியில் இடம் தந்து
நிழலில் குளிர் தந்தாய் நினைவிருக்கிறது.

நான் நாகரிகங்களை வளர்த்த போதும்
நாட்டுக்காக உழைத்த போதும்
நன்றி கூற ஆளில்லை
ஓடி ஓடி ஓய்ந்து ஓய்வெடுக்க,
தேடி தேடி வந்து மலர் தூவினாய் நினைவிருக்கிறது.

உன் அணைப்பில் நானும்
என் நிழலில் நீயும் 
என நாம் சிலிர்த்தாடிய பொழுதுகள்
சில வென்றாலும், பல வென்றாலும்
சிந்தனைக்குள் எப்போதும் சிறப்பாய் நினைவிருக்கிறது.

பூத்து, காய்த்து, கனிந்து நீயும்
ஓடி, உரைந்து, காய்ந்து நானும்
காதல் கொள்வது புதுமையோ?
உனக்காக நான் உயிர் தந்தேன்
எனக்காக நீ உயிர் தந்தாய் நாம்
காதல் கொள்வது புத்துமையோ?

இல்லை
இயற்கையான காதல்
இயற்கைக் கிடையில் காதல்.
மரத்தோடு நதி கொண்ட காதல்
மரணமும் விதியும் பிரிக்க முடியாத காதல்.

– கோ.ப.கதிரவன்,
கருமலை தமிழ் மன்றம்,
கிருஷ்ணகிரி.

Leave a comment