கவிதை – மா

மண்ணில் விதைத்த முத்துக் கொடி
கால் அகண்டு விரிந்த சின்னஞ் செடி
சிறிய கனியாகி பெரிய பலமான
மாங்கனி இனிக்கும் அமுதக்கனி

முக்கனியில் மூத்தவனே
முருகனின் மூத்தவனை உனக்காக
முந்தவைத்து சிண்டு முடிந்தவனே
திருவிளையாடல் தந்தவனே

வகைக்கொரு மாம்பழம்
வரலாறு நீளும், நீர்
செவிமடுத்து கேட்க அவர்
கதை சொல்லவா?

கட்டிகரும்பின் பகை
கட்டெரும்பும் கடிக்க துடிக்கும் சுவை
பருவம் முன்னர் பூக்கும் மாமரம்
செந்தூர வாசம் வீசும் செந்தூரம்

காமமுற்ற கருவண்டு
மஞ்சள் வண்ண தோல் கண்டு
பசி அடங்கும் பழமுண்டு
அதற்கு ருமானி என்று பெயருண்டு

துங்கபத்ரா நதி நீராடி
விஜயநகர கர்னூலில் விளைந்த
சாரில்லாத சதைபற்றான பழம்
இது பங்கனபள்ளி மாம்பழம்.

குண்டு வடிவே குத்திய காம்பே
வெட்டி வீசும் வீரன் வந்தாலும்
காதல் ரசம் வீசும் மாம்பழமே
மல்கோவாவே என் அழகே

வடியும் தேன் கண்டு
நாவில் சுவை கண்டு
உண்ட பின்னும் நாவிக் குழாயில் வாசம் வீசும்
மாங்கனிகளின் அரசே அல்போன்சாவே

சுவைப்போம் கார்பைட்கல் தொடாத கனிகளை
காதலிப்போம் வரிகளை
இயற்கையை வாசிக்கும் கவிதைகளை.

– கோ.ப. கதிரவன்,
கருமலை தமிழ் மன்றம்,
கிருஷ்ணகிரி.

Leave a comment