கவிதை – வறுமை

குப்பை குவியலுக்குள்
களைத்த பார்வையும் நெளிந்த தேகமுமாய்
இக்குழந்தையின் அதிகபட்ச
கனவு என்னவாக இருக்கும்?

காலை கண்விழித்து,
கால் கடுக்க நடந்து, திரிந்து, சம்பாதித்து,
கால் வயிறு நிறையும் வாழ்வு
நிறைவாவது எப்போது என்பதா?

வறுமையில் மக்கள்
வாடித்துயர் படும்
வாழ்க்கை நல்
வளமாவது எப்போது என்பதா?

இன்றோ என்றோ
எம் வாழ்க்கை
எல்லோர் போலும்
இன்புறுவது எப்போது என்பதா?

சாக்கடை நதிக்கு நடுவே
சணல்பை இடைவெளியை விட சிறிய
இடத்திலான வீடு விசாலமாய்
வியாபித்தல் எப்போது என்பதா?

தேனாறும் பாலாறும் பாயும் என்று
எல்லா விடுதலை நாள் உரையிலும்
உரைக்கும் மக்கள் பிரதிநிதியின் வரிகள்
உண்மையாவது எப்போது என்பதா?

கால் செருப்பு இல்லாத போதும்
கடும் குளிரிலும்
சுடும் வெயிலிலும்
கால் வெந்த போதும், உறைந்த போதும்

காலணி அணியாதது
என் கலாச்சாரம் என்று
சமாளித்துக் கொள்ளும் நிலை
முடிவது எப்போது என்பதா?

என்ன என்ன கனவுகளோ?
வாழ்க்கையை
எண்ண எண்ண கனவுகளோ?
அவன் கனவு அலங்கார வாழ்க்கை அல்ல அத்தியாவசிய வாழக்கை.

வறுமை
வாழ்க்கைக்கும் வயிற்றுக்குமான  போராட்டம்
ஒரு வேளை உணவுக்கும்
ஒரு கிழிசல் உடைக்குமான போராட்டம்

வானுயர்ந்த பள்ளி கட்டிடங்கள் இருக்கும்
இத்தேசத்தின் பைகள் சுமந்த பிள்ளைகள்
வீதியில் நடப்பதை காண்கிறேன்
ஒருவன் புத்தகப்பையையும்
இன்னொருவன் காகிதம் பொறுக்கும் பையையும்.

வறுமை பொருளாதார நிலையில்லை
திட்டமிட்டு திணிக்கப்பட்ட சதிவலை

என்னவோ இங்கு மட்டும் தான்
உழைப்பவன் வறுமையிலும்
ஊதாரி உள்ளாசத்திலும்
வாழ்கின்றனர்.

– கோ.ப. கதிரவன்,
கருமலை தமிழ் மன்றம்,
கிருஷ்ணகிரி.

Leave a comment